Thursday, 3 July 2014

முல்லை திணை

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது
முல்லைத்திணை
முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.
முல்லையின் கருப்பொருட்கள்:
கடவுள் மாயோன் (திருமால்)
மக்கள் குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள் காட்டுக்கோழி
விலங்கு மான், முயல்
ஊர் பாடி, சேரி, பள்ளி
நீர் குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம் கொன்றை, காயா, குருந்தம்
உணவு வரகு, சாமை, முதிரை
பறை ஏறுகோட்பறை
யாழ் முல்லை யாழ்
பண் முல்லைப்பண்
தொழில் சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.
முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

 இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.
கிருஷ்ணனின் காலகட்டம்:
கிருஷ்ணன் பிறந்து சற்றேறக்குறைய 5200 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். கண்ணன் எப்படி வாழ்ந்தான் என்பதைப்பற்றி அறிவது மட்டுமல்லாமல், கண்ணனுடைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுவும் முக்கியம். அதற்காகவே இந்தியா முழுவதும் கண்ணனை மையப்படுத்திக் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியின் முக்கியநோக்கமே கண்ணன் எப்படி என்றென்றைக்குமான ஒரு ஆளுமையாக இருக்கிறான் என்பதை உணர்த்துவதே. இந்த கண்காட்சியின் பெயர் The Glorious World of Kanna – கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம். இந்தக் கண்காட்சியில் கண்ணன் பிறந்து வளர்ந்த இடமான கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்கள், அங்கு நடைபெற்ற அகழ்வாய்ச்சிகள், அப்போது கிடைத்த அரிய தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அதன் மூலம் கண்ணனின் காலத்தைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிரேக்கர்கள் கண்ணனை வழிபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவை மிகவும் சுவைமிக்க ஆதாரங்கள். உதாரணத்திற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள் டெக்ஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு கருட ஸ்தம்பம் பற்றிச் சொல்லலாம். இந்த ஸ்தம்பத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கர். அவர் கண்ணனை ’என்னுடைய தலைவர், கடவுள் வாசுதேவ கிருஷ்ணன்’ என்று சொல்கிறார். அதேபோல் சமீபத்தில் ஆப்கானஸ்தானில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்ணன், பலராமனுடைய காசுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் என்பது அந்த காலத்தினுடைய காந்தஹார். காந்தாரி பிறந்த இடம். காந்தாரியின் சகோதரன் சகுனி பிறந்த இடம். ஆகவே கண்ணனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது என்பது நமக்குத் தெரியவருகிறது.
இரண்டாவது, மஹாபாரதம் நடைபெற்ற காலகட்டம் வழியாகவும் கண்ணனின் காலத்தை நாம் யூகிக்கலாம். மஹா பாரதம் நடந்தது சுமார் 5000 ஆண்டுகள் முன்பு. துவாரகை என்பது தற்போதைய குஜராத்தில் உள்ளது. அதிலிருந்து ஏறக்குறைய ஒரு 150 கிலோ மீட்டர் டோல வீரா என்ற இடம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகத்திலேயே முழுவதுமாக ’உருவாக்கப்பட்ட ஒரு நகரம்’ என்று சொல்லலாம். உலகின் பத்து அதிசயங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துள்ளனர். டோல வீராவுக்கு நான் போயிருந்தபொழுது, ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரம் மிக செழிப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. அங்கு பல்வேறு வகையாக கட்டடங்கள் இருந்திருக்கவேண்டும். உயர்வர்க்கத்தினருக்கு, நடுத்தர வர்கத்தினருக்கு, அங்காடிகளுக்கு என பல்வேறு கட்டடங்கள் இருந்திருப்பதற்கான சான்றுகளைப் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியான குடிநீர் இணைப்பு என்று, மிகவும் பிரமிப்பான வகையில் அந்த ‘உருவாக்கப்பட்ட நகரம்’ இருந்துள்ளது. இதனுடைய காலகட்டம் கிமு 3200 என்று தொல்லியலாலர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 5200 ஆண்டுகளுக்கு முன்னால்!. இது ஏறக்குறைய கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த காலகட்டம்தான். ஆகவே டோல வீராவும் கண்ணனுடைய தலைநகராயிருந்திருக்கலாம், கண்ணன் சார்ந்த ஒரு இடமாயிருக்கலாம் என்று இப்போது சொல்லுகிறார்கள்.
கண்ணன் – ஒரு நேர்மறைப் பிம்பம்
கண்ணனைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. அது ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று சொல்லுகிறது. ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜகத்குரு என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன நினைவில் தோன்றவேண்டும்? ஒரு மனிதன், 125 ஆண்டுகள் முழுமையாக, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தவர் கண்ணன் என்பதே. அதாவது ஒரு மனிதனுடைய ஒட்டுமொத்த தீரம். இதைப்பற்றி மேல்நாட்டு அறிஞர்கள், ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறது’ என்கிறார்கள். ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு தலைவர். ஒரு தோழர்.
மட்டுமில்லாமல் இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது. கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எங்கள் அமைப்பில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உங்களுக்குச் சொன்னால், கண்ணன் எப்படி நம் வாழ்க்கையில் கலந்திருக்கிறான் என்பது புரியும்.
கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க ஏறக்குறைய 35 சூத்திரங்களை (formula) வகுத்திருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கேற்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தமுடியும். மிக மிக எளிமையான மற்றும் நடைமுறை சாத்தியங்கள் நிறைந்த சூத்திரங்கள். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. எனவேதான் கிருஷ்ண உள்ளுணர்வு நிலை (Krishna Consciousness) பற்றி ஓயாது பேசுகிறோம்.

சில உதாரணங்களைச் சொன்னால் எப்படி கண்ணனின் வாழ்வு இன்றும் பொருந்தி வருகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். குருக்ஷேத்திரப் போர் நடந்தபோது பீஷ்மருக்கு திடீரென்று ஒரு ஆசை. கண்ணனின் ரௌத்ரமான, வீரமான பாவத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார். அது முடியாத காரியம். ஏனென்றால், கண்ணன் போரின்போது ஆயுதத்தை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் பீஷ்மர் அவ்வாறு வேண்டியது கண்ணனுக்கு தெரிந்துவிட்டது. பீஷ்மர் கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு பக்தர். எனவே பக்தர் சொன்னதை கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? காத்துக்கொண்டிருக்கிறார். கால, தேச வர்தமானங்களுக்காக கண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார். பீஷ்மர் கேட்டது போரின் நான்காவது நாளில். கண்ணன் ஐந்தாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை. ஆறாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை, ஏழாவது நாள் காலை. அர்ஜூனனுடைய உயிராற்றல் மிகவும் குறைவாக இருந்தது. அர்ஜுனன் சரியாக வில்லைப் பயன்படுத்திப் போர் செய்யவில்லை.
இந்த சமயத்தில் கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். ‘அர்ஜுனா நீ பயனற்றவன். உனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைப் பார், நான் போய் சண்டைபோட்டு பீஷ்மரை கொல்கிறேன், நீ பேசாமல் இரு’ என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறார். ஓடும்போது கண்ணெல்லாம் சிவந்துபோய்விடுகிறது. கையில் வில்லை எடுத்துக்கொண்டு போகிறார். எந்தமாதிரியான ரூபத்தை பீஷ்மர் பார்க்க ஆசைப்பட்டாரோ அந்த ரூபத்திலேயே சென்றார் கண்ணன். உடனே அர்ஜுனன் பின்னாலேயே ஓடிவந்து அவர் காலிலே விழுந்து ’கண்ணா! நீ இதுமாதிரி செய்யாதே, ஏனென்றால் எனக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்றுகூறி, அவரை அழைத்துக்கொண்டு போகிறான். அர்ஜுனனின் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும் வந்துவிடுகிறது. இதுவும் கண்ணனின் செயலே. இது ஒரு புறம் இருக்க, கண்ணன் உடனே பீஷ்மர் விரும்பிய ரூபத்தைக் காட்டிவிடவில்லை.அந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மேலாண்மை இயக்குநர் ஒருவர், தனக்குக் கீழே வேலை செய்யும் ஒருவரின் மேல் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்கூட உடனே எடுக்கக்கூடாது. தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். எந்த சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் தனது நிறுவனத்துக்குக் கெடுதல் வராதோ அப்போதுதான் செயல்படுத்தவேண்டும். கண்ணன் எந்தக் காலத்தில் இருந்து எந்தக் காலத்துக்கு அனாசாயமாகத் தாவுகிறான் என்பதைப் பாருங்கள்.

சிசுபால வதத்தின்போதும் கண்ணனிடம் நாம் ஒரு அரிய பாடத்தைப் பெறமுடியும். அவன் நூறுமுறை மட்டுமே தீயமொழி பேசமுடியும். அதைத் தாண்டினால், உடனே அவனைக் கொல்வேன் என்றான் கண்ணன். எவ்வெப்பொழுதெல்லாம் சிசுபாலன் கண்ணனைப்பற்றித் தீயமொழி பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய விரல் உயராது. அதாவது அதெல்லாம் எண்ணிக்கையில் வராது. நீ இடைப்பையன் என்பான் அவன். பேசாமல் நின்றுகொண்டிருப்பான் கண்ணன். நீ மாமாவை கொன்ற பாதகன் என்று சொல்வான். அப்போதும் பேசாமல் இருப்பார் கிருஷ்ணர். ஆனால் இதே சிசுபாலன் பீஷ்மரைப் பற்றி சொன்னவுடனேயே விரல் உயரும். தன்னைப்பற்றி என்ன சொன்னாலும் கண்ணனுக்கு கவலை இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள், தன்னுடைய சிஷ்யர்களைப் பற்றி சொன்னால் தாங்கமாட்டான். இதை நாம் இன்றைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். ஒரு மேலாண்மை இயக்குநர் (எம்.டி.) தன்னை நேரடியாக எது சொன்னாலும் கவலைப்படக்கூடாது. நீ என்ன திட்டினாலும் எனக்கு கவலை இல்லை என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் அதையெல்லாம் கடந்துவந்துவிட்டவர். ஆனால் தனது நிறுவனத்துக்கு நேர்மையாக வேலை செய்பவன் மீது யாரேனும் அவதூறு சொன்னால் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும் கண்ணனின் காலம் கடந்த பாய்ச்சல்.
இப்படி கண்ணனின் வாழ்க்கை முழுவதிலும் இருந்து நாம் இன்றைக்குத் தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். கண்ணன் இந்தியக் கலாசாரத்தின் மையம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நிகரற்ற ஓர் ஆளுமை.



Wednesday, 2 July 2014

இடையர் என பெயர் வரக் காரணம் என்ன


          முல்லை நில மக்கள் இடையர் என்றும் அழைக்கப்பெறுவர். ‘இடையர்’ என்னும் பெயர் ஏற்ப்பட்டதற்கானக் காரணத்தைச் சொல்லவந்த மு.அருணாசலம்பிள்ளை. “முல்லைநிலம்,பாலை குறிஞ்சி என்னும் நிலங்களைப் போல வன்னியமாதலும், மருதம், நெய்தல் என்னும்  நிலங்களைப் போல் மென்னியமாதலும் அன்றி, இடைப்பட்ட நீர்மையதாகலின், அந்நிலத்து வாழும் மக்கள் இடையர்,பொதுவர் எனப்பட்டனர் மு.அருணாசலம்பிள்ளை தொல்காப்பியம், அகத்திணையியல் உரைவளம், பக்கம்.240 என்கின்றார்.
            இடையர் என்பதற்கு விளக்கம் கூறவந்த நந்தமண்டசதகம்,             “இடை-மடி, மடியில் உண்டான பாலால் ஜீவிப்பவர்” (நந்தமண்டலசதகம்,ப.68) என்றும்,
       “இடை-ஐவகை நிலத்து நடுவிலுள்ள முல்லை நிலம்,இடையிலான
        முல்லைநிலத்துள்ளோர்”(நந்தமண்டலசதகம்,பக்கம்.69) என்றும் கூறுகின்றது. இடையர் என்பதற்கு “இடைச்சாதியார்” என்று விளக்கம் கூறுகின்றது செந்தமிழ் அகராதி(பக்கம்.60).

        குறிஞ்சி நிலத்துக்கும் மருத நிலத்துக்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் இடையராவர் என்கின்றார் சக்திதாசன் சுப்பிரமணியன் (குறுந்தொகைக் காட்சிகள் பக்கம்.239). எனவே, மேற்காணும் சான்றுகளின் மூலம் இடையர் என்ற பெயர் அவர்கள் வாழ்ந்த இடத்தால் பெற்ற பெயராகும் என்பதை அறிய முடிகின்றது

TYPING WORK
    M.MANI YADAV

ஆய் அண்டிரன்

வேள் ஆய்,பொதிகை மலைத் தலைவன்.இம்மலையை அடுத்த ஆய்குடி இவனது தலைமை ஊர்.

ஆய் நாடு யானைக் கூட்டங்கள் நிரம்பிய நாடு.பரிசு வேண்டி வந்தோர்க்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன்.ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும்,அதனை ஆய் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் கூறுகின்றனர்.

ஆய் அண்டிரன் தன்னைப் பகைத்த கொங்கரை எதிர்த்துப் போரிட்டான்.தோல்வியுற்ற கொங்கர்,வேல் முனையை மாற்றி எறிந்து
விட்டு போர்களத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் புலவர்களுக்கும்,
இரவலர்களுக்கும் ஆய் கொடுத்துவிட்டதால் அவனிடம் வறுமை குடி கொண்டது.நாடும் அழகு குன்றியது.கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து...ஒரு நாள் இறந்தே போனான்.


Tuesday, 1 July 2014

ஆயர்களின் பிரிவு


நல்லினத்து ஆயர் அல்லது கோவினத்து ஆயர் - பசுக்களை உடையவர்



புல்லினத்து ஆயர் -  ஆடுகளை உடையவர்


கோட்டினத்து ஆயர் - எருதுகளை உடையவர்






Saturday, 28 June 2014

ஆயர்கள் புரிந்த போர்கள்


 இடையர் புரிந்த போர்கள்:

ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கள்வர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போர் புரிவார்கள் கோவலர்கள்(கோ காவலர்கள்) செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத்தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! பசுக்களைக் காக்கும் முல்லை நில மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலர் என்ற பெயர் முல்லை நிலத்தில்  தோன்றியது தான்! கோவலன் = கோபாலன் = கண்ணன்!

வெட்சி திணை:
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழில் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.கோவலர் ஆநிரை கவர்வதில் வல்லவர்
 மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத்துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும்  ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.

கரந்தை திணை:

கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.

ஏழை, இடையன், இளிச்சவாயன்


சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்கு பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள், அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம் என்றனர்.

உடன் இடைக்காடர் அவர்களிடம், ஏழை, இடையன், இளிச்சவாயன் இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள். உங்களை துன்பம் நெருங்காது என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான். ஏழை என்பது ராமனையும், இடையன் என்பது கண்ணனையும், இளிச்சவாயன் என்பது நரசிம்மரையும் குறிக்கும்.

ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாக பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.

அவரே கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்தார்.

நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை இளித்தவாயன் எனக் குறிப்பிட்டார்.

இளித்த என்றால் வாயை திறந்த என்றும் பொருள் உண்டு.

யாரந்த நப்பின்னை?


விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே

(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.

(இன்னிலை: பாடல் 22)

யாதவராயர்கள்


யாதவராயர்கள் என்போர் 12,13ம் நூற்றாண்டுகளில் சோழர்களின் கீழே இருந்த குறு நில மன்னர்கள்.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்ட இவர்களின் ஆட்சி போசள அரசன் வீர வல்லாளனுக்கு அடியிலும்,
பின்னாளில் 14-ம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசிற்கும் அடியில் தொடர்ந்தது. இவர்கள் கீழைச்
சாளுக்கியர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மேலும் தென் தமிழக யாதவர்களுக்கும் தொண்டைமண்டல யாதவர்களுக்கும் யாதவராயர் என்ற பட்டம் இருந்தது.யாதவராயர்கள் கிட்டத்தட்ட மாநில
ஆளுநர்கள் போலச் சோழர்களுக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள். இவர்கள் திருக்காளத்திக் கோயிலிலும்,
திருவேங்கடம் கோயிலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

இவர்களின் முதல் அரசன் சாளுக்கிய நாராயணன். அவன் பேர்கொண்ட மரக்காலில் தான் திருவேங்கடம்
கோயிலில் 17-ம் நூற்றாண்டு வரை கோயிலுக்கு வரும் கூலங்களை (தானியங்களை) அளந்திருக்கிறார்கள்.
இந்தக் குலத்தில் வந்த வீர நரசிங்க தேவன் (கி.பி.1205 - 1262) துலாரோகணம் (துலையின்
ஒருபக்கத்தில் இவனும் இன்னொரு தட்டில் பொன்னும் இட்டு அளந்து அதை கோயிலுக்குக் கொடுப்பது) செய்து வந்த
மாழையைக் கொண்டுதான் கோயில் விமானத்திற்குப் பொன் வேய்ந்திருக்கிறார்கள். இன்றும் அந்தப்
பொன்வேய்வை நாம் பார்க்கிறோம். சென்னையின் அருகில் உள்ள திருவொற்றியூரில் தன் பெயரிலேயே வீர
நரசிங்கேசுவரம் உடைய நாயனார் என்றபெயரில் படிமம் அமைத்துள்ளான்.

இந்த யாதவர்களின் கடைசி அரசன் பெயர் ஓபள யாதவன். இவன் தஞ்சையின் அரசன் என்றும் சொல்லப்
பெறுகிறான். காரணம் புரிபடவில்லை. ஓபளனைப் பற்றிய கீழே வரும் இந்த வெண்பா இன்னிசை வெண்பாப்
போல் தெரிகிறது. (ஆனால் தளை எங்கோ இடிப்பது போலவும் தெரிகிறது.) கல்வெட்டில் சிதைந்து
காண்பதால் இங்கே ஒரு சீரும் குறைகிறது.

ஓதவளர் வண்மை ஓபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ்வினி தூழிபுக
மருக்குலவும் சோலை வடவேங்கட வாணர்க்குத்
திருக்கைமலர் தந்தான் சிறந்து.

பழங் கல்வெட்டில் வந்துள்ள வேறு ஏதேனும் வெண்பாக்கள் இருந்தால் இடுங்களேன். ஒலையில் இருந்தவற்றை மட்டும்
தானே நாம் அறிந்துள்ளோம்.

ஆயர் குல வள்ளல் பேகன்

  பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்:
 
 


வேள் - பேகன்.

இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன் (ஆ+இனம்+குடி =>ஆவினன் குடி =>ஆயர் குடி ); இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது "முரசுகடிப்பிகுப்பவும்" என்னும் புறப்ப பாட்டாலும்(158) சிறுபாணாற்றுப் படையில் 84- முதல் 122-வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன்மையைப் பரணர் என்னும் பழையபுலவர் புகழுமிடத்து--" குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"--என்ற கருத்துப்பட,

" அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
  உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
  வரையா மரபின் மாரி போலக்
  கடாஅ யானைக் கழற்காற் பேகன்
  கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே"

என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடுவது கண்டு, ' அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றது போலும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படாத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான்-- என்பதாம்.இச்செய்தி--

" உடாஅ போரா ஆகுத லறிந்தும்
  படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
  கடாஅ யானைக் கலிமான் பேக!"

எனப் பரணரும் (புறம்-141)

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன்


ஆய் குல மன்னர்கள் பொதிகை மலை அருகே உள்ள ஆயக்குடியை தலைநகராய் கொண்டு ஆண்டு வந்தனர் இவர்கள் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ஆய் என்ற பட்டதை கொண்டு உள்ளனர். இவர்கள் தங்களை ஆய் குலம் என்றும் யாதவ குலத்தினர் என்றும் செப்பேட்டில் கூறியுள்ளனர். இவர்கள் ஆயக்குடியை தலைநகராய் கொண்டு பல பகுதிகளை ஆண்டு உள்ளனர். இவர்களில் ஓர் அரசன் தான் கோகருந்தடக்கன்

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன் கி.பி 855ல் பாபநாசம்,திருநெல்வேலி,கழுகுமலை,கோயில்பட்டி,சங்கரன்கோவில்,நாகர்கோவில்,திருவனந்தபுரம் பகுதிகள் அக்காலத்தில் மலைநாடு என்று அழைக்கப்பட்டன. அப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவன் மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் சமகாலத்தவன். 1904 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோபிநாதராவ் என்பவர் முதன் முதலில் திருவிடைகோடு என்ற இடத்தில் கோகருந்தடக்கனை பற்றி சில கல்வெட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளார்.

இதன்பிறகு 1908 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தின் செப்பேடுகளில் திரு.கோபிநாதராவ் படித்து பார்த்தபோது இதில் எல்லா தமிழ் செப்பேடுகளிலும் கோகருந்தடக்கன் என்ற பெயர் பொறிக்கபட்டிருந்தது கண்டு ஆச்சரியமுற்றுள்ளனர். இந்த செப்பேடுகள் மூலம் இவன் ஒரு ஆயர் குல அரசன் என்பதும் இவன் ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளை பதிவு செய்துள்ளான்.

இதில் மீன்சிரை என்ற ஊரில் இருந்த உலக்குடிவில்லை என்ற பெயருடைய ஒரு நிலத்தை மீன்சிரை கிராம சபையிடமிருந்து கோகருந்தடக்கன் விலைக்கு வாங்கி அந்த நிலத்தின் நான்கு பக்கமும் பெண் யானையை நடக்கவிட்டு அளந்து கற்கள் நட்டு ஒரு விஷ்ணு கோவிலை நிர்மானித்தான் பின்பு அந்த பகுதிக்கு பார்த்திவ சேகரபுரம் என்று பெயரிட்டுள்ளான். செப்பேட்டின் இரண்டாவது இதழில், பார்த்திவ சேகரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விஷ்ணு கோவில் பூசாரிகள் கடமை பற்றியும், கோவிலுக்கு மலர்கள் தருபவர்களின் தினசரி வேலை பற்றியும் கோவிலில் அணையாவிளக்கு அமைத்து பராமரிப்பவர்களுக்கான கூலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செப்பேட்டில்,கல்விச்சாலையில் மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் விஷ்ணு கோவிலை ஒட்டி 95 மாணவர்கள் தங்கி படிக்க ஒரு சாலையும் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், மாணவர்கள் பள்ளியில் தங்கும்போது மற்ற மாணவர்களை துன்புறுத்தக்கூடாது,மாணவர்கள் தங்கும் இடத்தில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களுக்கு கொண்டுவரக்கூடாது. ஆயுதத்தால் சகமாணவர்கள் இம்சிக்ககூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இச்செப்பேட்டின்படி வேதப்பள்ளி நடத்த அனுமதிக்கப்பட்ட உணவுச்சாலை பொழிசுழ் நாட்டைச்சேர்ந்த குரட்டுர் நாட்டிற்கு உட்பட்ட இடைக்குரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தது.இந்த பள்ளி ஒரு தர்மஸ்தாபனம். தர்ம ஸ்தாபனம் எந்த வகையில் நடைபெற வேண்டுமோ அந்த வகையில் நடைபெறுகிறதா எனமலைநாடு,சிங்கால் நாடு,முதலநாடு,படைப்பாநாடு மற்றும் வழுவா நாட்டு மக்கள் கண்காணிக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மலை நாட்டை ஆண்ட ஆய் குல அரசர்களின் நியாயமான ஆட்சி முறை தெரிகின்றது. வாழ்க வளர்க! ஸ்ரீவல்லபன் என்று அழைக்கப்படும் இவ்வரசன் தனது புகழாலும், அன்பாலும் எதிரிகளை அழித்தவன், நந்தா அரசன் வழியிலும் யாதவ குளத்திலும் தோன்றியவன்.தனது தலைவன் கிருஷ்ண பரமாத்மா மீது நெருங்கிய பக்தி கொண்டவன்.

கீழே குறிப்பிட்ட ஆவணங்கள் ஆய்குல ஆட்சியில் ஆயக்குடி தலை நகராக இருந்ததையும். பின்னாளில் வாழ்ந்த ஆய்குல அரசி ஆய்குல மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம்

215. The Trevandram Huzur office plates of Kokkaru-
nandadakkan- '.Tamil language and alphabet.) Records that on
14490871!! day of the Kali era, and fifteenth day of the ninth year
of king Karunandadakkan, he purchased from the Sabha of
Minchirai a plot of land, erected a Vishnu temple on it together
with a sdUi for 95 saftars (scholars) and endowed lands for temple
services, lamps, festivals, etc. The king must have ascended the
throne about A.D. 855-6. He belonged to the Yadava or Aykula
dynasty who ruled over the mountain tracts of South Travancore
who had Ayakudi for their capital and who were called the Lords
of the Podiya mountain. Mr. Gopinatha Rao traces the history of
the Ay king Andiran as far as it is ascertained from the Purand-
nuru. See Trav. Arch. Scr., Vol. I, p. 3. He also points out that
Karunandadakkan of these plates should be the same as Adakkan
or Sri Vallabha, the son of Karunandan and grandson of Sadayan,
and contemporary of Varaguna Pandya, who came to the throne in

216. The Huzur office plate of Vikramaditya Varaguna.
(Tamil.) The record belongs to the eighth year of king Vikrama-
ditya Varaguna and says that while staying at Tirunandikarai he
married Murugan Sendi or Aykula Mahadevi, the daughter of
Teriganadu Kilavan, and granted some lands for her enjoyment.
Mr. T. A. Gopinatha Rao gives arguments to show that this king
was the successor of Kokkarunandadakka referred to in the
previous inscription. See Trav. Arch. Ser., Vol. I, No. II.

ஆதாரம்:

http://www.ebooksread.com/authors-eng/v-vijayaraghava-rangacharya/a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala/page-28-a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala.shtml

புதுக்கோட்டை அரசர் பொப்பண்ணக் காங்கேயர் கோன்


            யாதவ மன்னர்கள் பலரின் வரலாறு மறைக்கப் பெற்றுள்ளது. அதே போன்று பலருடைய வரலாறு வெளிக்கொணராமலே உள்ளன. இவ்வாறு வெளிவராமல் இருந்த வரலாற்றில் ஒன்று தான் 2000 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையை ஆண்ட பொப்பண்ணக் காங்கேயர் கோன் ஆகும்.
          பொப்பண்ணக் காங்கேயர் கோனின் கோட்டை, புதுகோட்டை அருகே கலசமங்கலம், சிங்கமங்கலம் ஆகிய இரு ஊர்களையும் இணைத்து புதுக்கோட்டை அரசர்களால் ஏறத்தாழ கிபி.1250 இல் இரண்டரை மைல் சுற்றளவுக்கு கட்டப்பட்டதே புதுக்கோட்டையும், கொத்தளங்களும். ஆனால் இன்று கோட்டையின் சுவடுகள் இல்லை. எனினும் பழைய கோட்டையின் சுவடுகளைப் புதுக்கோட்டை நகரத்துக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏறத்தாழ 50 ஏக்கர் பரப்பளவில் அடி உயர மேடாகக் காணப்படுகிறது. பொப்பண்ணக்கோன் கோட்டைக்கு வெளியே கிழக்கிலும், மேற்கிலும் இரண்டு முனிஸ்வரன் கோவில்களும், தெற்கே அய்யனார் கோவிலும், வடக்கே காளி கோயிலும் உள்ளன. இந்த நான்கு கோயில்களும் அந்த கோட்டையின் காவல் தெய்வங்களாகும். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தாம் உரை எழுத அடிப்படைக் காரணம்.
          “கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ணக் காங்கேயர் கோன் அளித்த சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்றும் உரைவித்ததே” என்று கூறுவதிலிருந்து அடியார்க்கு நல்லாரை ஆதரித்த வள்ளல் பொப்பண்ணக் கோன் எனத் தெரிய வருகிறது.
           “தமிழகத்தில் சங்க கால மன்னர் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் பெருமளவில் அழியாமல் உள்ள ஒரே இடம் பொப்பண்ண கோட்டை எனலாம்” என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். எனவே யாதவ மன்னர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பொருட்டுத் தற்போதாவது சமுதாய நலனில் அக்கறை உள்ள கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டால் பல குறுநில மன்னர்களின் வரலாற்றை வெளிக்கொணரலாம்.